Tuesday, 8 June 2021

ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்களின் ஒரு வம்சமாக "திருமலை ஈச்சம்பாடி" வருகிறது. இவர்களை ஈச்சம்பாடியார்  என்று அழைப்பது வழக்கம்.  இவர்கள் கௌண்டன்ய கோத்ரத்தை சார்ந்தவர்கள். கௌண்டின்ய கோத்ரத்திற்கு வசிஷ்டர் மூல ரிஷி. இப்பொழுது சற்றே விவரித்து கேள்வி பதில் மூலமாக அறிந்து கொள்வோம். முடிந்த வரை ஆதார பூர்வமான, பகுத்தறிவுடன் கூடிய ஒரு எழுத்து படிமம்

1. "திருமலை ஈச்சம்பாடி' வம்சம் பெயர் காரணம்?

"திருமலை" + "ஈசன்" + "பாடி" - திருமலை வாழ் ஈசனை பாடியவர்கள். பாடுதல் என்றால் ஓதுதல் என்ற பொருள் வைத்து கொண்டால், திருமலை ஈசனுக்கு வேதம் ஓதியவர்கள் என்ற பொருள் வரும். திருமலை வாழ் ஈசனுக்கு வேத பாராயண கைங்கர்யம் செய்தவர்கள்.  ஒரு சந்தேகம் வரலாம். "ஈசன்" என்றால் சிவ பெருமானாய் அல்லவா குறிக்கும்?திருவேங்கட மலையில் அருள் பாலிக்கும்  திருமால் "வேங்கட" + "ஈசன்" என்றே அழைக்க படுகிறார்.  இதற்கான ஆதாரம் ஆழவார் பாடல்களில் இருக்கிறது.
நம்மாழவாரின் திரு வேங்கடத்தான்  பாசுரங்கள்

"ஈசன் வானவர்க்கு என்பன்  என்றால்
அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்று மிலேன்
என்கண் பாசம் வாய்த்த பரம் சுடர் சோதிக்கே"

"தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் புகு குருகூர் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இவை யாவும் வல்லார்
வாழவார் வாழ்வெய்தி ஞாலம் புகழ வே"

ஆகவே, திருமலை ஈசன் என்பது திருமலை வாழ் திருமால். அவரை வேதம் ஓதி போற்றியவர்கள், "திருமலை ஈச்சம்படியார்கள்"

2. வம்ச தொடக்கம் என்ன?

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த "அழகர் பிரான்"  என்கின்ற என்கின்ற "சுந்தரராஜன் சுவாமி" என்கின்ற "ஈசாண்டான்" என்பவரே இந்த வம்சத்தின் துவக்க ஆச்சர்யாராக போற்ற படுகிறார். இவர் "ஸ்ரீ ஆளவந்தார்"
என்ற "யமுனாச்சாரியார்" என்பவரிடம் "பஞ்ச சமஸ்கரம்" செய்த்தவர்". (சங்கு சக்ரங்கள் தோளில் தரிப்பது). இந்த மஹாசார்யர் இராமானுஜருக்கு "ஸ்ரீ நரசிம்ம மஹாமந்த்ரத்தை" உபதேசித்தவர் என்று நம்பப்படுகிறது. இந்த "அழகர் பிரான்" என்கின்ற "ஈசாண்டான்" கிரந்தங்களை செய்து இருக்கிறார் என்பது தெரிகிறது. அவை யாவும் தற்பொழுது  இல்லை.  ஆனால் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய "ஸ்ரீமத் ரஹஸ்ய  த்ரிய  ஸாரம் " என்ற மணிப்பிரவாள நூலில் "ஈஸான்டான் " அருளிச்செய்ததாக ஒரு ஸ்லோகத்தாய் குறியீட்டு காட்டுகிறார். 750 வருடங்களுக்கு முன்பு ஈஸாண்டான் எழுதிய நூல்கள் பயன்பாட்டில் இருந்து இருக்கின்றன என்பது தெரிகிறது.

ஈசண்டானுக்கு  இரண்டு மகன்கள். இருவரும் ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களை மாறினார்கள். ஸ்ரீ ராமானுஜர் 74 சிம்ஹசனாதிகளை விசிட்டாத்வைத சித்தாந்தத்தை பரப்புவதற்காக நியமித்தார். அந்த 74 ஆச்சார்யர்களில் இருவர் ஈஸாண்டனின் மகன்கள். இவர்கள் முறையே "ஈச்சம்பாடி ஆசான்" மற்றும் "ஈச்சம்படி ஜீயர்" என்று வழங்க பெற்றனர்.
இவையே இந்த வம்சத்தின் பூர்வ ஆச்சார்யர்களை பற்றிய உண்மைகள்

3.  ஆதி ஊர் எங்கே?

இந்த வம்சத்தை சேர்ந்த சிலர் இந்த வம்சத்தின் ஆதி ஊர் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். "ஈச்சம்பாடி"  என்பது அவர்கள் வாழ்ந்த இடத்தின் பெயராகவும் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஸ்ரீ. திருமலை ஈச்சம்படி ரங்கநாதாச்சாரியார் என்ற சவ்வாமியின் நியமனபடி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர், அவரின் சிஷ்யர்கள்.

அதன் படி தென் இந்தியாவில் உள்ள "ஈச்சம்பாடி" என்ற நான்கு ஊர்கள் கண்டு அறியப்பட்டன. அவற்றில் தர்மபுரி அருகில் உள்ள ஈச்சம்பாடி என்ற கிராமமும் , திருத்தணி அருகே உள்ள ஈச்சம்பாடி கிராமமும் தேர்ந்தெடுக்க பட்டன. கடைசியில் திருத்தணி அருகே உள்ள ஈச்சம்பாடி என்ற கிராமமே ஆதி ஊர் என்ற முடிவுக்கு வந்தனர்.


பின்வரும் காரணங்களினால் திருத்தணி அருகே உள்ள கிராமம் ஆதி ஊராக  இருக்கும் என்று தேர்ந்து எடுக்கப்பட்டது :

a . இந்த கிராமம் திருப்பதிக்கு அருகில் உள்ளது. திருவேங்கட முடியானை பாடியவர்கள் திருப்பதிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தான் இருந்து இருக்க கூடும்
b . இந்த இடத்தின் நீட்சியாக உள்ள சித்தூரில் "கௌண்டன்ய காடு" உள்ளது. (kounanya  wild life sanctuary) உள்ளது. இந்த காட்டில் கௌண்டன்ய மகரிஷி தவம் செய்ததாக நம்ப படுகிறது.  ஈச்சம்பாடி வம்சத்தினர் கௌண்டன்ய கோத்ரத்தை சார்ந்தவர்கள்.

இதன் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு சென்ற பொழுது ஒரு பாழ் அடைந்த பெருமாள் கோவில் இருந்தது. அநேகமாக பூமியில் புதைந்த நிலையில் இருந்தது. விசாரித்ததில் அங்க இருந்த பெருமாள் மற்றும் தாயார் பக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் தனியாக வைத்து பூஜை செய்து வந்து இருக்கிறார்கள். அந்த பெருமாள்  மற்றும் தாயார் புகை படத்தை எடுத்து ஸ்ரீ, ரங்கநாதர்ச்சரியரிடம் காட்டிய பொழுது, அது ஸ்ரீ விஜயராகவன் திருக்கோலம் என்று அருளினார்.

பின்பு கோவிலை சற்று தோண்டிய பொழுது சிலைகள் சில கிடைக்க பெற்றன. அதில் நம்மாழவார் தலை இல்லாதபடி ஒரு சிலையும் கிடைத்தது. இந்த இந்த நம்மாழவார் சிலை, காஞ்சிபுரத்தில் உள்ள நம்மாழவார் போன்று ஹ்ருதயத்தில் தன் திருக்கையை வைத்து இருந்தார். நம்மாழர்வரின் முதல் பதிகத்தில் வரும் "தொழுது எழுந் மனனே" என்ற வரி காஞ்சிபுரம் பேரருளாளன் எனும் வரதராஜனை குறிப்பதாக சொல்வர். அதன் காரணமாக நம்மாழவாவரின் திருமேனியின் திருக்கை ஹ்ருதயத்தில் இருப்பதாக பொருள். இந்த கிராமத்தில் கிடைத்த சிலையும் அவ்வாறே இருந்தது. ஆனால் அதன் பின்பு அந்த சிலை பற்றிய விஷயம் எனக்கு தெரிய வில்லை

பின்பு ஈச்சம்படி வம்சத்தினர் எல்லோரும் கூடி இந்த கோவிலை புனர் அமைத்து, புதிய மூலவர்களை பிரதிஷ்டை செய்து ஸம்ப்ரோக்ஷணம் சென்ற ஆண்டு செய்தனர். நான் இன்னும் அங்கு செல்ல வில்லை. புகை படத்தில் பார்த்த பொழுது , மிக அழகாக வயல்களும் தென்னை மரங்களும் சூழ்ந்த கொசஸ்தலை ஆற்று படுகையில் அமைந்து இருக்கும் கிராமம்


4. குடியபெயர்தல்?

ஈச்சம்பாடி வம்சத்தில் தற்பொழுது திருவெள்ளுர் , ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மதுராந்தகம், திருவஹீந்திரபுரம் (கடலூர்) மற்றும் தஞ்சை மாவட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர் . மேல் சொன்ன வரிசை படி அவர்களின் குடிபெயர்தல் பல நூற்றாண்டுகளுக்கு அமைந்து இருக்கலாம் (Migration route).

தஞ்சாவூருக்கு தெற்கே யாரேனும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

மேலும் இந்த வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ அந்தணர்கள்  பெரும்பாலும் வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களை இருக்கின்றனர். தென்கலை சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களாவும் சிலர் இருக்கின்றனர்.


இந்த எழுத்து படிமத்தை எழுதியதில் நோக்கம், இது ஒரு முக்கிய குறிப்பாக இருக்கும் என்பதால். Documentation நாம் பல செய்யாததால், பலவற்றை இழந்து இருக்கிறோம். அதனால் இதை பதிவு செய்கிறேன்

நன்றி
ரங்கராஜன்




No comments:

Post a Comment