Sunday, 11 February 2018

கம்பன் - பெயர் காரணம் - என் பார்வை 

கம்பன் - இந்த பெயர் கரணம் என்ன? கம்பம்   என்றால் தூண் . கம்பன் என்றால் தூணில் இருந்து வந்தவன்  அல்லது தூணில்  இருப்பவன் அல்லது தூண் போன்றவன் அல்லது தூணுக்கு சொந்த காரன். ஆகவே கம்பன் என்ற பெயரே நரசிம்ம தெய்வத்தை குறிப்பது ஆகும்

கம்பர் நரசிம்மரின்  பக்தர்  என்பதற்கு எடுத்துக்காட்ட அவர்  "இரண்ய வதை படலத்தை" இராமாயணத்தில் சேர்ந்ததுதான். அந்த படலத்தில் அவன் இறைவனின் எட்டெழுத்து  மந்திரத்தை போற்றும்  வகையில் செய்யுளிட்டு இருக்கிறார் 

'மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.


மேலும் அவர் கம்பத்தில் இருப்பதை பின் வரும் பாட்டில் ஒலிக்கிறார் 

'"உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென, நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்" என்றான். 

அவரின் பெயர் "தூணான்" என்று இருக்கலாம் ? ஆனால் கம்பன்  என்று ஏன் இருக்க வேண்டும்ம்? வடமொழியில் "ஸ்தூணா " என்பதுதான் "தூண்"
. "கம்பம்" என்பதும் வடமொழி சொல் தான் . ஆனால் "ஸ்தூணா" என்பது வடமொழியில் "ஸ்திரி லிங்கம்" (பெண் பால்), "கம்பம்" என்பது "புலலிங்கம்" (ஆண் பால்). அதனால் தான் "கம்பன்" என்று குறிப்பது சரியாக இருந்து இருக்கும் .

மேலும் கம்பரின் இராமாயணம் இறை அருள் பெற்றதை என்பதை நிரூபிக்க சிதம்பரத்தில் "நாகம்" குறித்த பாடலை பாடினார், நாகம் வந்தது. அதை பார்த்தவுடன் அங்கிருக்கும் தீக்ஷிதர்களால் இது இறை அருள் பெற்றது என்று ஆசீர்வதிக்கப்பட்டது. அதே போல் அவர் திருவரங்கம் வந்து "இரண்ய வதை படலத்தை" பாடியவுடன் எதிரில் இருக்கும் மேட்டு அழகிய சிங்கர்  (நரசிம்மர்) சந்நிதியில் பலத்த சிங்கத்தின் உறுமல் கேட்டது. அங்கிருந்த வைணவர்களாலும் இந்த நூல் ஆசீர்வதிக்கப்பட்டது

கம்பர் தன பெயராலும், வான்மீகத்தில் இல்லாத இரணிய வதை படலத்தை இங்கே சேர்த்ததால், நரசிம்மரே இந்த நூலை அங்கீகரித்ததாலும் , அவர் ஒரு நரசிம்ம பக்தர் என்பது அறிய முடிகிறது. அவர் பெயரான "கம்பர்" என்பது நரசிம்ம தெய்வத்தை குறிப்பது என்பது என் கருத்து 

-- அரங்கராஜன் 
மொழிக்கெல்லாம் மூத்தவளே , மூப்பரியா இளையவளே

நாவின் உள் செல்லும் உணவோ  வயிறுக்கு குளிர்மை
நாவின்  வெளி செல்லும் பாவோ  மனதுக்கு  இனிமை

உன்னை சொல்லின் என்  எச்சிலும் ஆகிறது புனிதம்
குறளாய்  நீ வந்து சொன்ன மனிதம்

மனிதன் போற்றும் புனிதனும்,  உன் பின் செல்கிறான்
மாயத்தை தோற்று வித்தவன் மயங்கி நிற்கிறான்

என்றும் மறையாத மறை
மறை போற்றும் மாபெரும் இறை
இறை  வணங்கும் நீ எனக்கு பறை

யாரும் இல்லா பொழுதினில் என் அகத்தில்  நீ இருக்க
புறமானாய் நீ எனக்கு பேச்சின் காற்று வெளி வர

மொழி பேசா மௌனத்தில் ஞானம் மலரும்
மொழியே ஞானமாய் நீ இருக்க
மௌனத்தின் ஞானமே அஃஞானமாய் ஆனதே 

கவிகள் எல்லாம் அலங்கரித்த உன் அழகை
கணினிகளும் காண துடிக்கின்றன  
அறிவியலும், பொறியியலும் உன்னை தரிசிக்க இருக்கின்றன 
வானியலும்  கோளியலும் உன் வரும் திசையை நோக்கு கின்றன

சுண்ட காய்ச்சிய பாலில் திரண்டு வரும் பாலாடையில்
சக்கரையின் பாகு கலந்து, குங்கும பூ மேலிட்டு
பக்குவமாய்க்கு ருசிக்க நாவுக்கு இனிமையோ?
இல்லை
"தமிழ்" என்று என்று ஒரு வார்த்தை போதும் எனக்கு
வையத்தின் முழு அமிர்தம் என் நாவில்